உள்ளூர் செய்திகள்

நாய்கள் குரைத்ததால் கோவிலுக்குள் சென்று தஞ்சம் அடைந்த காட்டு யானை

Published On 2024-11-29 05:11 GMT   |   Update On 2024-11-29 05:11 GMT
  • வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக குடியிருப்புக்குள் நுழைந்து சுற்றி வருகின்றன.
  • வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக காட்டு யானைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக குடியிருப்புக்குள் நுழைந்து சுற்றி வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் வீடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி செல்கின்றன.

குன்னூர் அடுத்த மேலூர் ஊராட்சியில் தூதூர் மட்டம் கேரடாலீஸ் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

வெகுநேரமாக யானை அங்கேயே சுற்றி திரிந்தது. ஊருக்குள் யானை நுழைந்ததை பார்த்ததும், அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் குரைத்தன.

மேலும் யானையை நோக்கி நாய்கள் குரைத்தபடியே வந்தன. நாய்கள் குரைத்து கொண்டே பின்தொடர்ந்ததால் காட்டு யானை, குடியிருப்பு பகுதியில் இருந்த சக்தி மாரியம்மன் கோவிலுக்குள் சென்று தஞ்சம் அடைந்தது.

அங்கேயே யானை நீண்ட நேரம் நின்றிருந்தது. இந்த நிலையில் நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்து பார்த்தனர்.

அப்போது யானை கோவிலுக்குள் நின்றிருந்தை கண்டு அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் அங்கு நின்ற யானை அதன்பிறகு அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

Tags:    

Similar News