உள்ளூர் செய்திகள்

லாரி-டிராக்டரில் கொண்டு வந்து சுடுகாட்டில் ஊற்றப்படும் கழிவுநீர்

Published On 2024-12-22 12:16 GMT   |   Update On 2024-12-22 12:16 GMT
  • நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
  • கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

வண்டலூர்:

வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா நகர், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் சுடுகாடு உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து டிராக்டர் மற்றும் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முழுவதும் இந்த சுடுகாட்டு பகுதி மற்றும் சுடுகாட்டை ஒட்டி உள்ள சுற்று சுவர் ஓரத்தில் ஊற்றப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு நீர் ஊற்றப்படுவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உருவாகி உள்ளது.

அப்பகுதி மக்கள் கழிவு நீரை ஊற்ற வரும் டிராக்டர், லாரி டிரைவர்களை கண்டித்தால் மிரட்டும் வகையில் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து கழிவுநீரை ஊற்றி வருகிறார்கள்.

எனவே கழிவு நீரை சுடுகாட்டு பகுதியில் ஊற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நெடுங்குன்றம் சுடுகாட்டில் கழிவு நீரை லாரி மற்றும் டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றி சென்று விடுகின்றனர். இதனை கண்டித்தால் டிரைவர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். போலீசில் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதுபற்றி பலமுறை போலீஸ் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News