உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் போதுமான வசதி இல்லை- பக்தர்கள் குற்றச்சாட்டு

Published On 2024-12-22 12:00 GMT   |   Update On 2024-12-22 12:00 GMT
  • கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
  • 24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய மற்றும் பட்டு சேலை எடுக்க தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

சுற்றுலா வரும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஒலிமுகமது பேட்டை, ஏகாம்பரநாதர் கோவில் அருகே தனியாக இடம் உள்ளது. இது சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

வாகனங்களுக்கு கட்டணமாக 6 மணி நேரத்திற்கு பஸ்சுக்கு ரூ.300, வேனுக்கு ரூ.200, காருக்கு ரூ.150, இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது.

வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு இலை உள்ளிட்ட குப்பைகளை அங்கேயேபோட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனை முறையாக அகற்று வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது மேலும் போதுமான கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் அங்குள்ள காவலாளிகளிடம் பக்தர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, காஞ்சிபுரத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். வாகனம் நிறுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப அங்கு வசதி இல்லை. 2 கழிவறைதான் உள்ளது. அதுபோதுமானதாக இல்லை. கூடுதல் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.

பக்தர்களுக்கு ஏற்ப மேலும் போதிய வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள். கட்டணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கியும் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது என்றனர்.

Tags:    

Similar News