உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து மாடு செத்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-08-23 09:34 GMT   |   Update On 2022-08-23 09:34 GMT
  • மின்சாரம் பாய்ந்து மாடு செத்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்நிலையில் எந்திரங்களின் சோதனை ஓட்டத்திற்காக மின்மாற்றியில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற்று பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரது மாடு அந்த வழியாக வந்தபோது, மின்வயரை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே செத்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் மற்றும் அப்பகுதி மக்கள் மின் வயரை பாதுகாப்பின்றி அலட்சியமாக அமைத்திருந்ததாக, அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர் இறந்த பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News