உள்ளூர் செய்திகள்

தடகள போட்டியில் 31 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Published On 2022-09-11 15:27 IST   |   Update On 2022-09-11 15:27:00 IST
  • கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
  • 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

அரவேணு -

நீலகிரி, கொடைக்கானல் மண்டலத்திற்கு உட்பட்ட ஆங்கிலப் பள்ளிகளுக்கு இடையேயான 70-வது ஆண்டு வருடாந்திர தடகள போட்டிகள் ஊட்டியில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

மொத்தம் 31 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் தொடங்கி வைத்தார். ஆங்கில பள்ளிகளின் சங்கத் தலைவர் சரவணசந்தர் முன்னிலை வகித்தார். தடகள போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 192.5 புள்ளிகளை பெற்ற கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இதேபோல் பெண்கள் பிரிவில் ஜூட்ஸ் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் 11, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-ம் இடம், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இதுமட்டுமின்றி தனிநபர் சம்பியன் ஷிப் விருதுகளை ஆண்கள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சர்வேஸ், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சவன் எஸ் ரெஜிநால்ட் ஆகியோரும், பெண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஹர்ஷநேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கரீஷ்மா ஆகிய ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

மண்டல அளவிலான போட்டியில் சாதனைப் படைத்த ஜூட்ஸ் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு, வனஜா சேகர் ஆகியோரை, பள்ளி தாளாளர் தன்ராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன், பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன் ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர்.  

Tags:    

Similar News