கோவை கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு
- அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததின் பேரில் வழக்கு பதியப்பட்டது.
- அரசு வேலைக்கான நியமன ஆணையை சுதர்சனிடம் சுபாகன் நிஷா கொடுத்ததாக தெரிகிறது.
கோவை,
கோவை இரும்பொறை பட்டாசுக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன்(வயது 27).
டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் சரியான வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவருக்கு கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ அலுவலக கணக்காளர் சுபாகன் நிஷா(35) என்பவர் அறிமுகமானார். அவர் சுதர்சனிடம் அரசு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது எனக் கூறி ரூ.4 லட்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதர்சன், சுபாகன் நிஷாவிடம் ரூ. 4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வேலை வாய்ப்புக்கான எந்த ஒரு அழைப்பும் சுதர்சனுக்கு வரவில்லை.
இதுகுறித்து அவர் சுபாகன் நிஷாவிடம் கேட்டுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அரசு வேலைக்கான நியமன ஆணையை சுதர்சனிடம் சுபாகன் நிஷா கொடுத்ததாக தெரிகிறது.
அந்த ஆணையை சுதர்சன் சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அரசு வேலைக்கான போலி நியமன ஆணையை சுபாகன் நிஷா கொடுத்து ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
அவருக்கு உடந்தையாக கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்துறையில் ஊழியராக வேலை பார்த்த சாந்தி என்பவர் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் சுபாகன் நிஷா மற்றும் சாந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக இதுகுறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர் சுபாகன் நிஷாவை கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.