தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொன்குமார் வலியுறுத்தல்
- அனைத்து நாடுகளின் அரசு அலுவலர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
- பல தொழிலாளர்கள் சிறைப்பட வேண்டிய கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
புலம்பெயர்வு குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சர்வதேச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் கலந்தாய்வுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
தொழிலாளர்கள் தரமான வேலை, நல்ல சம்பளம் என்ற நோக்கோடு பல்வேறு நாடுகளுக்கு ஆண்டாண்டு காலமாக வேலைக்கு புலம் பெயர்ந்து சென்று வருகின்றனர். இவர்கள் வேலையோ, உறுதி அளிக்கப்பட்ட சம்பளமோ கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அந்த நாட்டு முதலாளிகள் பறிமுதல் செய்து கொள்வதால் விரும்பிய நேரத்தில் அவர்களால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். செய்த வேலைக்கு உரிய சம்பளமும் கிடைப்பதில்லை. அந்த நாட்டின் சட்ட திட்டங்களை அறியாத காரணத்தினால் பல தொழிலாளர்கள் சிறைப்பட வேண்டிய கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி வெளிநாட்டில் உள்ள தமிழர்களை பாதுகாப்பதற்காக ஒரு வாரியத்தை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.10 லட்சத்து 700 கோடி தொழிலாளர்கள் மூலம் அந்நிய செலவாணியாக இந்த அரசு பெற்றுள்ளது. ஆனால் இந்த அரசு இப்படிப்பட்ட வெளிநாடுகளில் பாதிக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு பொன்குமார் கூறினார்.
நிகழ்ச்சியில் புலம் பெயர்வோருக்காக பணியாற்றக் கூடிய தொழிற்சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசியா, பசிபிக் சேர்ந்த அனைத்து நாடுகளின் அரசு அலுவலர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.