தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சி- ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை, வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
- பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல், புளி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி-குளத்தூர் கடற்கரை வழியாக பீடி இலை உள்ளிட்ட சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை குளத்தூர் அருகே கல்லூரணி கிராம கடற்கரை பகுதியில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 1200 கிலோ), இங்கிலாந்து நாட்டின் சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் மேலசுப்பிர மணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் (வயது 25), ஒசநூத்து சிவன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.
மேலும் கடத்தலுக்கு உடந்தையாக அவர்களுடன் வந்து தப்பி ஓடிய தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.