முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்
- ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
- 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியம் குணமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும், 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும், 56 கால்நடை கிளை நிலையங்களும், ஒரு நடமாடும் கால் நடை மருந்தகமும், ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன்றிகளும் விவசாயயிகளால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் மற்றும் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது. மேலும், இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலட்டு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் இச்சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மோகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.