மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- அரசாணை 152-ன்படி பணி யாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைப்பு
- வாரிசுகளுக்கு கருணை பணி நியமனம் இல்லாமல் போகும்
சேலம்:
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணை 152-ஐ மறுசீராய்வு செய்யக்கோரி, சேலம் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி, மாநகராட்சி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜம்பு தலைமை வகித்தார்.
சுகாதார அலுவலர் மணிகண்டன், துப்பரவு பணி மேற்பார்வையாளர் குமார், ஓட்டுனர் சுப்பிரமணி, செவிலியர் சாந்தி, நிர்வாகிகள் ராஜா, வக்கீல் சிவக்குமார், மணிகண்டன், சரவணன், நாகராஜன், சுப்ரமணியன், வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 152-ன்படி பணி யாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதுடன், தனியார் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் வாரிசுகளுக்கு கருணை பணி நியமனம் இல்லாமல் போகும்.மேலும், 35 ஆயிரம் பணியிடங்கள், வெறும் 3,417 ஆக சுருக்கப்பட்டு உள்ளது. அலுவலக உதவியாளர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை பல பணியிடங்கள் இருக்காது. இதனால், ஆயிரக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு பறிபோ கும். எனவே அரசாணை 152-ஐ மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.