மடத்துக்குளம் அருகே மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் முற்றுகை போராட்டம்
- சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
- விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பெய்த மழை காரணமாக குமரலிங்கம் பழைய வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் சுமார் 150 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் விவசாயிகள் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கனமழையின் காரணமாக சாமராயபட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம் பகுதிகளில் புது வாய்க்கால் தண்ணீர், மழைநீர் மற்றும் அனைத்து விதமான கழிவு நீர்களும் குமரலிங்கம் பழைய வாய்க்காலில் கலந்து ஆற்றுக்கு செல்கின்றன.
இதனால் வாய்க்கால் கீழ்பகுதியில், கடைமடையில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல் பயிர்கள், கரும்புகள், தென்னந்தோப்புகள் என சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடைமடையில் பாதிப்பை தவிர்க்கும் வகையில், உரிய இடத்தில் கால்வாய் அமைத்தல், நீர் வரத்தை கண்காணித்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற திட்டங்களை நீர்வளத்துறை செயல்படுத்தாமல் உள்ளனர். இதுவே பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.