தமிழ்நாடு

அ.தி.மு.க.வில் எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு

Published On 2024-12-15 08:05 GMT   |   Update On 2024-12-15 08:05 GMT
  • 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.
  • 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய தாவது:-

புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம், அம்மா அரசு இருக்குமா? இருக்காதா? என்ற நிலையிலே, அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு சோதனையான காலக் கட்டத்திலே இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற ஒரு தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அம்மா ஆட்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்று 4½ ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு எடப்பாடியார் அரசாகும்.

அதற்கு பிறகு இந்த இயக்கத்திலே எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளால், பல்வேறு சோதனைகள் வந்தது, பிளவுபட்டது. சின்னம் முடக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அதை எதிர் கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் எக்கு கோட்டையாக அ.தி.மு.க. கழகம் இன்று இருப்பதற்கு முழு காரணம் ஆளுமை மிக்க நம்முடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மை தோற்கடிப்பதற்கு எவனும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கைத்தான் நம் வெற்றிக்கு முதல்படி.

அந்த நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு நம் மீது மறைமுகமாக, நேரடியாக தாக்குதல்கள் நடத்தி கொண்டி ருக்கிறார்கள். 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.

அன்றைக்கு இந்த எடப்பாடியார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே எழுச்சி அதே ஆரவாரத்தோடு இன்றைக்கும் இருக்கிறது.

காது இருந்தும் கேட்காத செவிடர்களுக்கும், கண் இருந்தும் பார்க்காத குருடர்களுக்கும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மண்டபத்தில் நிரம்பி இருக்கிற இந்த தொண்டர்களை பாருங்கள். எங்கடா இருக்கிறது இங்கே கருத்து வேறுபாடு? எங்கிருக்கிறது சலசலப்பு?

சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இங்கே பாருங்கள். இந்த எழுச்சியை பாருங்கள்... இதுதான் 2026-ல் நம்முடைய அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும்... அமையும்.

நம்முடைய பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க. தொண்டனுடைய பலம் தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டன் இருக்கிற வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பன் மட்டுமல்ல 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால்தான் இந்த தொண்டனுடைய மனதை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காக பல் வேறு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

இதையெல்லாம் நாம் தலைவர் காலத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறோம். ஆகவே அ.தி.மு.க. மக்களை நம்பி மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற இயக்கம்.

இன்றைக்கு ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அழித்து விடலாம். வழக்குகளை போடலாம். கைது செய்யலாம். அ.தி.மு.க.வினரை அடக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி நடந்ததே அங்கு என்ன நிலைமை ஏற்பட்டது. குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது. மக்கள் பொங்கிவிட்டார்கள். இங்கு ஒருவர் மீது சேறு வீசப்பட்டதே. மக்கள் எழுச்சி அடைந்துவிட்டார்கள்.

வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா அரசு எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கூட்டணி... எல்லோரும் கேட்பது கூட்டணி. நான் கேட்கிறேன். 2001-ல் தேர்தலுக்கு 3 மாதம் முன்பு வரை கூட்டணி வந்ததா? எப்போது வந்தது? தேர்தலுக்கு 10 நாளுக்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. மிகப் பெரிய வெற்றியை அம்மாபெற்று தந்தார்.

2011-ல் கூட்டணி வந்ததா? எப்போது அமைந்தது? தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புதான் கூட்டணி அமைந்தது.

ஆகவே கூட்டணி வரும். அதை பொதுச்செயலாளர் பார்த்துக்கொள்வார். கவலையே படாதீர்கள். நாம் அமைக்கிறோமோ இல்லையோ ஸ்டாலினே கூட்டணியை அமைத்து கொடுத்து விடுவார்.

கவலையே படாதீர்கள். எப்போதெல்லாம் அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைகிறதோ அதற்கு பிறகு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

அந்த நம்பிக்கையோடு அந்த எழுச்சியோடு அந்த உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றி நம் அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையிலே அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

Tags:    

Similar News