தமிழ்நாடு

சில்லறை தட்டுப்பாடு காரணமாக ஆவின் விலை ஏற்றமா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2024-12-15 09:29 GMT   |   Update On 2024-12-15 09:29 GMT
  • தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது.
  • பாலின் அளவையும் 50 மி.லி. குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தேன்.

அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறி இருக்கிறது.

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடு தான் காரணம் என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலி ரூ.20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மி.லி.யாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம்.

ஆனால், பாலின் அளவையும் 50 மி.லி. குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்துவிட்டு, அதை நியாயப்படுத்து வதற்காக மேலும், மேலும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News