தமிழ்நாடு

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்

Published On 2024-12-15 06:50 GMT   |   Update On 2024-12-15 09:22 GMT
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தப்படுகிறது.
  • தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணியளவில் வந்தார். அவருக்கு ஸ்ரீ வாரு மண்டபத்தின் முன்பும் வழி நெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் அணியினர் பூரண கும்பங்களை கையில் ஏந்தியபடியும், மலர் தூவியும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

அதன் பிறகு அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த முன்னாள் அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் பெஞ்சமின், விருகை ரவி, தி.நகர் சத்தியா, ஆதிராஜா ராம், வேளச்சேரி அசோக், அலெக்சாண்டர், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, சிறு ணியம் பலராமன், பால கங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 2523 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 1000 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, ஆளுமைத் திறன் மிக்க அரசியல் தலைவராகத் திகழும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை 2026-ம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்.

* அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை பெருமை பொங்க நடத்திக் காட்டிய, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

* உலகப் பொதுமறையாகவும், இந்தியாவுக்கு வாழ்வியல் வழிகாட்டியாகவும், தமிழகத்திற்கு காலம் வழங்கிய கொடையாகவும் திகழ்கின்ற திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தப்படுகிறது.

* மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

* வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரிசெய்திடவும்; தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டது.

* கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறோம்.

* சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்கி விடாமல் தொடர்ந்து செயல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

* மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களில் பொதுக்குழு அழைப்பு கடிதம் இல்லாதவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுக்குழுவில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக வெளியே கூடியிருந்தனர்.

Tags:    

Similar News