உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகை: தஞ்சையில் மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை

Published On 2024-10-30 06:22 GMT   |   Update On 2024-10-30 06:22 GMT
  • முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
  • இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கள், ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேப்போல் இங்கிருந்தும் பூக்கள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுவாக முகூர்த்தநாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் நாளை முகூர்த்த நாளாகும். தீபாவளி மற்றும் முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் மல்லிகை கிலோ ரூ.500 முதல் 600 விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று 4 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகின. இதேப்போல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.

கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.300, ரோஜா ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் அதிகமாகும்.

இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, நாளை தீபாவளி பண்டிகை, முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News