மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணை- மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
- கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
- விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்தி றனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது, மாற்றுத்தி றனாளிகளுக்கான முகாமில் சுமார் 17 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த முகாமில் 269 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
முகாமில் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையினையும், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணையும் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்க 72 மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவுவங்கி மூலமாக 49 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்கள்மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் முரளிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.