வாகனங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
- வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி, தாளவாடி வழியாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகா மாநிலத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக திம்பம் மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வரை தார் சாலை சீர் செய்யப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து ரோட்டின் பல்வேறு பகுதிகளில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் நேற்று மாலை பண்ணாரி அருகே உள்ள குய்யனூர் பிரிவு என்னும் இடத்தில் பணியாளர்கள் வேகத்தடை அமைத்தனர்.
ஆனால் வேகத்தடை அமைத்ததற்கு எந்த ஒரு முன் அறிவிப்பு பலகைகள், வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கணவன்- மனைவி 2 பேர் மோட்டார் சைக்கிளில் பண்ணாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகத்தடை இருந்தது.
இதையடுத்து வேகத்தடையை கண்டதும் திடீரென பிரேக் போட்டார். இதில் அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த வேகத்தடை உடனே அங்கிருந்து அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து இந்த இடத்தில் உடனடியாக எச்சரிக்கை பலகை வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.