இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
- கீரப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
- கூட்டம் செல்லாது என்று மாவட்ட கலெக்டர் அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதில் இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதி வாழ் மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
4-வது வார்டில் உள்ள விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு, இதேபோல், 5-வது வார்டில் உள்ள கன்னியம்மன் கோவில் தெரு, பாபாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வே செய்யப்பட்டு அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு பட்டா வழங்குவதற்காக தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் தயார் நிலையில் இருந்த அனைத்து கோப்புகளும் மாயம் ஆக்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், காணாமல் போன கோப்புகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது ஜமாபந்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி மீண்டும் சர்வே செய்து மேற்படி பகுதி வாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதுபோல் விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வரை கிராம சபை கூட்டங்களை புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய கிராம ஊராட்சிகளில் குறைந்தது 300 நபர்களாவது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்றால்தான் அந்த கிராம சபை கூட்டம் செல்லும். ஆனால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வெறும் 150 பேர் மட்டுமே பங்கேற்றனர். எனவே மேற்படி சட்டத்தின் கீழ் கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் செல்லாது என்று மாவட்ட கலெக்டர் அறிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.