துபாய்-திருச்சி வந்த விமானத்தில் ரூ.47.5 லட்சம் தங்கம் பறிமுதல்
- துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
- 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி
திருச்சி விமான நிலை யத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் பல்வேறு முறைகளில் மறைத்து கடத்தி வரும் பயணிகளிடமிருந்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் இருக்கை ஒன்றில் பார்சல் இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானத்தில் ஏறி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இருக்கையின் அடியில் மறைத்து 6 பார்களாக எடுத்து வரப்பட்ட 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த பயணி விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் கொண்டு வந்த தங்கத்தை இருக்கையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.