உள்ளூர் செய்திகள்

பயண கட்டணம் உயர்வு - விமான நிறுவனங்களை விமர்சித்த ப.சிதம்பரம்

Published On 2023-06-18 23:47 GMT   |   Update On 2023-06-18 23:47 GMT
  • விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
  • பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சென்னை:

சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.

விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News