ஜல்லிக்கட்டு கோலாகலம் சீறிபாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்
- முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது.
லால்குடி:
திருச்சியை அடுத்த லால்குடி கீழ வீதி ஸ்ரீ மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியான காளைகள் மட்டுமே மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 400 வீரர்கள் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், லால்குடி வட்டாட்சியர் முருகன் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக பரிசு பொருட்கள் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கொண்டே இருந்தனர். காளையா...வீரனா.. என வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து மல்லுக்கட்டி கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை இறுகப்பிடித்தும் அடக்க முயன்றனர்.
சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது. மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி பந்தாடியது. சில காளைகள் தரையோடு தரையாக போட்டு போட்டு புரட்டி எடுத்தது. இதேபோல் திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டிய காட்சியை கண்ட பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் உற்சாகப்படுத்தினர். வீரர்கள் காயம் அடைந்தால் முதல் உதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
லால்குடி டி.எஸ்.பி தினேஷ் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழக அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.