தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் திறப்பு
- முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
- மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை:
நாடு முழுவதும் தற்போது பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது இங்கே மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதே போல் இப்போது தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' நாளை திறக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை நாளை காலை 10 மணியளவில் திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூல கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
இதில் சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் 'ஜெனரிக் மருந்துகள்', 'சர்ஜிக்கல்ஸ்' 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்' குறைந்த விலையில் கிடைக்கும்.
இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.