உள்ளூர் செய்திகள் (District)

ஜெயக்குமார் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மீண்டும் அதிரடி ஆய்வு

Published On 2024-06-07 06:58 GMT   |   Update On 2024-06-07 06:58 GMT
  • சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை.
  • சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் கடந்த மாதம் 4-ந் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் உவரி அருகே கரைசுத்துபுதூரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கை திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், இதுவரையிலான விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி அன்புவிடம் சமர்ப்பித்து விவரங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்து புதூருக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயக்குமாருக்கு சொந்தமான அந்த தோட்டம் சுமார் 7 ஏக்கர் அளவு கொண்டது. அதில் இதுவரை நெல்லை மாவட்ட போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடல் கிடந்த இடத்தில் இருந்து 1 ஏக்கர் அளவிலேயே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதனால் சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.

இதற்காக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, இன்று காலை முதல் ஜெயக்குமாரின் தோட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஏதேனும் முக்கிய தடயங்கள் சிக்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News