புத்தேரி ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி
- சி.சி.டி.வி. காமிரா காட்சியை கைப்பற்றி விசாரணை
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே புத்தேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்.ஐ உடைக்க முயன்றனர்.ஆனால் ஏ.டி.எம். மையத்தை உடைக்க முடியவில்லை. இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது.
இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றபோது ஏ.டி.எம். உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏ.டி.எம். உடைக்கப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரும் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.