கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.30½ லட்சம் வசூல்
- தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்கள் குவிந்தன
- உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. இரவு 7 மணி வரை நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட் டுள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3 மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டி யல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித், கோவில் பொருளாளர் கண்ணதாசன் கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. இரவு 7 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத் தில் உள்ள கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் மூலம் ரூ.30 லட்சத்து 65 ஆயிரத்து 819 ரொக்க பணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 34 கிராம் 100 மில்லி கிராம் தங்கமும், 94 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், அரபு எமிரேட்ஸ் திர்காம்ஸ் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.