கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
- கழிவுநீரை பாதாளசாக்கடை திட்டத்தில் இணைக்கும் பணிகளுக்கு, ரூ.2.67 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.
- ஆனால் பாதாள சாக்கடை யுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், மொத்தம் 63 வீடுகள் உள்ளன. இதில், கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 32 வீடுகளும் அடங்கும். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இந்த காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட செப்டிக் டேங்க் கழிவு நீர் அப்பகுதியிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கூறுகையில், செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் சொந்த பணத்தில் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்தாலும் அடுத்த மாதமே செப்டிக் டேங்க் நிரம்பி துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்றனர்.
இது குறித்து காவலர் குடியிருப்பு வீட்டு வசதி கழக அதிகாரி கூறுகையில், காவலர் குடியிருப்பு வீடுகள் பராமரிப்பை கடந்த, 2017-ம் ஆண்டு நகராட்சி கட்டுப்பாட்டுக்கு வழங்கி ரூ.4.28 லட்சம் டெபாசிட் தொகை கட்டியுள்ளோம். கழிவுநீரை பாதாளசாக்கடை திட்டத்தில் இணைக்கும் பணிகளுக்கு, ரூ.2.67 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.
ஆனால் பாதாள சாக்கடை யுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு செப்டிக்டேங்க் கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. மேலும் இங்கு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை. குப்பைகள் சரியாக அள்ளப்படுவதில்லை. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதே இல்லை.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.