உள்ளூர் செய்திகள்

ஒடிசா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2024-08-30 09:06 GMT   |   Update On 2024-08-30 09:06 GMT
  • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
  • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை:

மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

அதற்கடுத்த 2 நாட்களில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நாளை முதல் செப் 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

குஜராத்தின் தரைப்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெல்ல நகர்ந்து இன்று அரபிக் கடலில் புயலாக மாறும். இதற்கு 'அஸ்னா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை, நாளை மறுநாள் கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையும்.

பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல்கள் உருவாவதில்லை. முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல் உருவானது.

Tags:    

Similar News