எண்ணூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது
- மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- மாஞ்சா நூல் வைத்து காற்றாடி விட்டவர்கள் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னையில் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. மாஞ்சா நூல் அறுந்து செல்லும்போது அது வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்து காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மணலி புதுநரை சேர்ந்த அண்ணா துரை (வயது40) என்பவர் பிராட்வே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
எர்ணாவூர் மேம்பாலம் லிப்ட் கேட் அருகே சென்று கொண்டு இருந்தபோது எங்கேயோ அறுந்து பறந்து வந்த மாஞ்சாநூல் அண்ணா துரை கழுத்தில் சுற்றி இறுக்கியது. இதில் கழுத்து அறுந்து ரத்தம் கொட்டியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அண்ணாதுரையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாஞ்சா நூல் வைத்து காற்றாடி விட்டவர்கள் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.