மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறப்பு
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
- மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.