உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மகள் குறித்து முகநூலில் விமர்சனம்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

Published On 2025-01-08 15:01 IST   |   Update On 2025-01-08 15:01:00 IST
  • மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழரசனை மும்பை போலீசார் கைது செய்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • தமிழரசனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குத்தாலம்:

சென்னை சோழிங்கநல்லூர், பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் தமிழரசன் (வயது 35). இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக உள்ளார்.

என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலை சேர்ந்த தி.மு.க. தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இருந்து சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருவதற்காக தமிழரசன் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்துள்ளார். தமிழரசன் குறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழரசனை மும்பை போலீசார் கைது செய்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மும்பை விரைந்து சென்று, தமிழரசனை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டுக்கு அழைத்து வந்து நீதிபதி கலைவாணியிடம் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து தமிழரசனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தமிழரசனை மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

முன்னதாக தமிழரசன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோர்ட்டின் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

Tags:    

Similar News