மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந்தேதி 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116.10 அடியாகவும், நீர் இருப்பு 87.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
நீர்வரத்து 1000-க்கும் கீழ் சரிந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பின் அளவை மேலும் குறைத்துள்ளனர். அதன்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.