போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்- ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
- ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
- புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் காலாவதி ஆகி ஓராண்டு கடந்த நிலையிலும், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் போடப்படவில்லை. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்துப் பேசி போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
மேலும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.