தமிழ்நாடு

துறைமுகம் தொகுதியில் போட்டியிட எஸ்.பி.வேலுமணி தயாரா? - அமைச்சர் கேள்வி

Published On 2025-02-08 16:00 IST   |   Update On 2025-02-08 17:12:00 IST
  • 8 திருமண மண்டபத்திற்கு பணிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
  • சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை:

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று அயனாவரத்தில் உள்ள ஆதி சேமாத்தம்மன் கோவில் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.18.70 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய சமுதாய நலக் கூடத்தின் பூமி பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி வருமாறு:-

வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 8 திருமண மண்டபத்திற்கு பணிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த மண்டபங்கள் 50 ஆண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் கட்டப்பட உள்ளன. இந்த மண்டபம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கேள்வி:- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு களம் அமைத்து கொடுத்ததே தி.மு.க.தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறாரே?

பதில்:- அமைதிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று அ.தி.மு.க. கையெழுத்து போடாமல் சென்று விட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதற்கு பரிகாரம் தேட வேண்டும் என்பதற்காக ஏதாவது கருத்தை கூற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி கூறியுள்ளார். செல்லூர் ராஜூ எப்போதுமே எங்கள் பக்கம் இருப்பவர்.

கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரை தோற்கடிப்போம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறியுள்ளாரே?

பதில்:- இப்படித்தான் வாய்க்கொழுப்பு எடுத்து ஜெயக்குமார் பேசி வந்தார். முதலமைச்சர் வேட்பாளரான எங்கள் தலைவரை பார்த்து ராயபுரத்தில் போட்டியிட்டு பாருங்கள் என்றார். அப்போது முதலமைச்சர் அடக்கத்தோடு, நான் தேவையில்லை. சாதாரண ஒரு தொண்டரை நிறுத்துகிறேன். அவரிடம் வெற்றி பெற்று வாருங்கள் என்றார்.

தற்போது ராயபுரத்தில் இருந்து ஜெயக்குமார் காணாமல் போயுள்ளார். எஸ்.பி.வேலு மணியை வரச்சொல்லுங்கள். முதலமைச்சருடன் போட்டி வேண்டாம், துறைமுகம் தொகுதி தாராளமாக காத்திருக்கிறது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற சொல்லுங்கள். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News