உள்ளூர் செய்திகள்

விஜயுடன் எந்த முரண்பாடும் இல்லை: திருமாவளவன்

Published On 2024-12-06 05:53 GMT   |   Update On 2024-12-06 05:53 GMT
  • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜெயங்கொண்டம்:

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.

இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.

இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.

நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.

ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News