இறச்சகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்- அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
- காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
- தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி அருகே பேச்சாங்குளம் பகுதியில் வேம்படிகுளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளிலும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இதில் சுடுகாடு அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் ஒருவர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த தென்னந்தோப்பிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர் தோவாளை தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் சுடுகாடு, இடுகாடு மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் திரண்டனர்.
திடீரென நாகர்கோவில்-இறச்சகுளம் சாலையில் பேச்சாங்குளம் பகுதியில் ஊர் தலைவர் கார்த்திக் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், துணை தலைவர் மனோ சிவா, மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை தாசில்தார் கோலப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும் சீரானது. பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்றினர்.