மெட்ரோ ரெயில் பணிகளால் 3 ஆண்டுகளில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1696 கோடி இழப்பு
- சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 48 முக்கிய சந்திப்புகளில் கார், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்லும் நிலையே இருந்து வருகிறது.
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு மாற்று பாதைகளிலும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இப்படி நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு 10 நிமிட தாமதத்துக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.40 முதல் ரூ.130 வரையிலும் எரி பொருள் செலவு ஏற்படுவதாக ஆசிய மேம்பாட்டு வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கார்களுக்கு ரூ.130 வரையில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 63 வரையிலும் கூடுதல் செலவாகும் நிலையில் ஆட்டோக்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.41 எனவும் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இப்படியே கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1696 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது. மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளை சமன் செய்யும் பணிகள், சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணிகள் என தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலையில் மெட்ரோ பணிகளால் சாலைகள் குறுகலாக காட்சி அளிக்கின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது. மாநகர பஸ்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலையில் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மடிப்பாக்கம், நங்கநல்லூர், புழுதிவாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வழியே வேகமாக செல்வதால் விபத்துகளும் நடை பெறுகின்றன.
மெட்ரோ ரெயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் மோசமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையே உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களுக்கு முதுகுவலி ஏற்பட்டு மூச்சு குழாயிலும் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்வது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.