மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்
- டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.