மேலும் சில மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா ஞானசேகரன்? - விசாரணை தீவிரம்
- வீடியோ காட்சிகளை அவர் வாட்ஸ்அப் மூலம் வேறு யாருக்காவது பகிர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- மாணவிகள் இருந்தால் அவர்களிடம் பேசி புகார் பெறுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கைதான ஞானசேகரகனின் செல்போனை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "ஞானசேகரன் காமகொடூரனாக இருப்பது தெரிந்தது. நிறைய பாலியல் குற்றங்களை அவன் செய்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது" என்றனர்.
போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "ஞானசேகரன் மாணவிகள் மட்டுமின்றி தனது மிரட்டலுக்கு பணியும் பெண்கள் அனைவரையுமே செல்போனில் படமாக்கி இருக்கிறார். அந்த செல்போன் காட்சிகளை அவர் கடந்த 6 மாதமாக சேமித்து வைத்து இருப்பதை கண்டறிந்துள்ளோம்.
அந்த வீடியோ காட்சிகளை அவர் வாட்ஸ்அப் மூலம் வேறு யாருக்காவது பகிர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றியும் தீவிர ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் வீடியோ காட்சிகளுக்கு விடை கிடைத்தால்தான் இதில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்" என்றனர்.
இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் மட்டுமின்றி மேலும் பல இடங்களில் குற்றவாளி ஞானசேகரன் பல குற்றங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு அவரது செல்போன் வீடியோ காட்சிகளை போலீசார் ஆதாரமாக சொல்கிறார்கள்.
ஞானசேகரனின் செல்போனில் இருக்கும் வீடியோக்களில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆய்வு நடந்து வருகிறது. அப்படி மாணவிகள் இருந்தால் அவர்களிடம் பேசி புகார் பெறுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒருவேளை மேலும் சில மாணவிகள் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர் மீதான வழக்குகள் மேலும் இறுகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சர்ச்சை மேலும் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.