திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சென்னை பக்தர்கள் 4 பேர் தற்கொலை
- முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாகாலயாசர் (வயது45). இவரது மனைவி ருக்மணி பிரியா(40). மகள் ஜலந்தரி (17) மகன் ஆகாஷ்குமார் (15) ஆகியோர் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணமாக வந்தனர்.
அவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. பண்ணை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் சென்று பார்த்த போது அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டுக்குள் 4 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.