தமிழ்நாடு

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க ஏற்பாடு? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Published On 2024-12-28 10:48 GMT   |   Update On 2024-12-28 11:21 GMT
  • பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
  • இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

சென்னை:

தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பெருமைமிகு பண்டிகை பொங்கல் திருநாளாகும்.

இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன் மனித குலத்திற்கே அடித் தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பெருமைமிகு விழா ஆகும்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரொக்க பணம் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க அரசின் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.

மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிகிறது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது.

Tags:    

Similar News