உள்ளூர் செய்திகள்

நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு- கடைகளுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-02-16 08:56 GMT   |   Update On 2023-02-16 08:56 GMT
  • நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.

இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.

நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News