பாவூர்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை - பெரும் சேதம் தவிர்ப்பு
- பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- சம்பவத்தன்று தலைமை ஆசிரியை ஜான்சி ராணி அறையில் இருந்து வெளியே வந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜான்சி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது அறையில் இருந்து வெளியே வந்து அந்த வழியாக வந்த மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.
அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் எவ்வித பாதிப்பு மற்றும் உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.