உள்ளூர் செய்திகள்

பொது இடங்களில் குப்பை எரித்தால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை

Published On 2024-09-27 09:30 GMT   |   Update On 2024-09-27 09:30 GMT
  • தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
  • தெருவிளக்குகள் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் தான்.

சென்னை:

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் கொட்டுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பொது இடங்களில் குப்பைகளை எரித்தால் இதுவரை ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இனி ரூ.2000 ஆயிரமாக அபராதம் விதிக்கப்படும்.

வியாபாரிகள் குப்பை தொட்டி அல்லது குப்பை கூடை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மெரினா, பெசன்ட் நகர், அண்ணாநகர் போன்ற முக்கியமான இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட்டம் முடிந்ததும் அந்த பகுதியை தூய்மை படுத்த வேண்டும். தூய்மைபடுத்தாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்புக்காக பாதுகாவலர்களை பள்ளி தலைமை ஆசிரியர்களே நியமித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர் கண்ணன் பேசும்போது, பருவமழை நெருங்குவதால் பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத் துறை மூலம் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பல சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. அவற்றை உடனடியாக பேட்ச் வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மழைக்காலத்தில் சிரமமாகி விடும். தெருவிளக்குகள் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் தான். பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது என்றார்.

இதற்கு ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகளை மட்டும் குறிப்பிட்டு பேசினால் அதை நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என்றார்.

சொத்துவரியை வருடத்துக்கு 6 சதவீதம் தாமாகவே உயர்த்தி கொள்ளும் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இதை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் சிவராஜ சேகர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசும்போது, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மாநகராட்சிகளில் இருப்பது போல் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இதனால் மேலும் சில உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Tags:    

Similar News