- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது. உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதர் சுவாமியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும், சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும், பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.