உள்ளூர் செய்திகள்

உடுமலை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும் - பயணிகள் வலியுறுத்தல்

Published On 2023-01-13 07:34 GMT   |   Update On 2023-01-13 07:34 GMT
  • பழனிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பொங்கல் சிறப்பு ரெயிலை தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும்.
  • சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட்டை, யு.டி.எஸ்., செயலி வழியாக ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.

உடுமலை :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று முதல் 18ந் தேதி வரை, இயக்கப்பட உள்ள இந்த ெரயில் கோவையில் புறப்பட்டு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக திண்டுக்கல் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் காலை 9:20 மணிக்கு கோவையில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். பகல் 2 மணிக்கு திண்டுக்கல்லில் புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவையை சென்றடையும். இதனால், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ரெயிலை தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:- தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட்டை, யு.டி.எஸ்., செயலி வழியாக ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தைப்பூச விழா வருகிறது. இதையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பழனிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பொங்கல் சிறப்பு ரெயிலை தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும்.

இதனுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரை வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் ரெயிலை வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும்.கோவை - மதுரை ரெயிலின் வேகத்தை அதிகரித்து ஏ.சி., பெட்டிகள் மற்றும் நான்கு முன்பதிவு பெட்டிகளை இணைத்து தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News