உள்ளூர் செய்திகள்

சுப்ரமணிய சாமி முருகன் கோவில் அருகே 2 கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

Published On 2024-09-13 15:02 IST   |   Update On 2024-09-13 15:02:00 IST
  • குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
  • தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அருகே பூக்கடை, எலெக்டரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை, பேன்சி ஸ்டோர் கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் கோவிலையொட்டி அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். அதன் அருகே ஜெயராமன் என்பவர் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை 2 பேரும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். அப்போது திடீரென்று குமாரின் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடையில் இருந்து புகை வெளியேறியது. இந்த புகை சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

அப்போது குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.

உடனே கடையில் இருந்து வெளியே குமாரும், ஜெயராமனும் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில் தீ மளமளவென பரவி கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதற்குள் குமாரின் கடையில் இருந்த பழைய எலெக்ட்ரிக்கல் பொருட்களும், ஜெயராமன் கடையில் இருந்த பேன்சி பொருட்களும் முழுவதும் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீப்பற்றி கொண்டதா? அல்லது வேறு யாரவாது தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீவிபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News