உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா- பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-01-19 15:32 IST   |   Update On 2023-01-19 15:32:00 IST
  • ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று திருவிழா இன்று நடைபெற்று வருவதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

கடலூர்:

பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. மஞ்சக்குப்பம் நேதா ஜிசாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று திருவிழா இன்று நடைபெற்று வருவதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News