உள்ளூர் செய்திகள்

முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்: இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- 4 பேர் மீது வழக்கு

Published On 2023-07-31 16:34 IST   |   Update On 2023-07-31 16:34:00 IST
  • பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  • தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த பாலையூர் அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சி தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன்.

இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்தபோது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாக கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மண்டபம் கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு கிராமமக்கள் கணக்கு கேட்டதாகவும், அதற்கு பாலசுப்பிரமணியம் உரிய கணக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராமமக்கள் நீக்கியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவரது வீட்டின் கொல்லையில் நேற்று முன்தினம் மண் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கோமல் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (43) ஆகியோர் தட்டிக்கேட்டனர். பின்னர், இதுகுறித்து பாலையூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் 15 பேர் நேற்று அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு செல்வராஜ், குணசேகர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் அனைவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News