உள்ளூர் செய்திகள் (District)

அண்ணாமலையின் 100 நாட்கள் நடைபயணம் நாளை ஆரம்பம்- மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

Published On 2023-07-27 06:44 GMT   |   Update On 2023-07-27 06:44 GMT
  • நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
  • ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

ராமேசுவரம்:

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. 3-வது முறையாக தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் கொண்டுவர பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் அமித்ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நடைபயண தொடக்க விழாவுக்கு பின்னர் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (29-ந்தேதி) காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பிறகு காலை 11 மணிக்கு மற்றொரு தனியார் ஓட்டலில் நடைபெறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு அப்துல் கலாமின் இல்லத்திற்கு செல்லும் அமித்ஷா, அப்துல்கலாமின் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலாமின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு பகல் 12.40 மணிக்கு குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்.

அங்கிருந்து மண்டபம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணியளவில் டெல்லி செல்கிறார்.

அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் டி.ஐ.ஜி. துரை தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 30 டி.எஸ்.பி.க்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாகவும், இதற்காக அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. விழா மேடையானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

நாளை நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இதற்காக புகார் பெட்டி ஒன்றும் எடுத்து செல்லப்படுகிறது. முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.

நாளை மறுநாள் (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.

இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந் தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.

ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந் தேதியும், திருச்சியில் 11-ந் தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழிக்கு நடைபயணம் செல்கிறார்.

நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை நவம்பர் 27-ந்தேதி சேலம் செல்கிறார். டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.

சென்னையில் ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நாளை தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாட்களை கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Tags:    

Similar News