உள்ளூர் செய்திகள்

உதயசூரியன் கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்ததையும், தற்போது அவர் மீண்டும் பா.ஜ.க.வில் சேர்ந்ததையும் படங்களில் காணலாம்.

கோவை அரசியலில் ருசிகரம்: தி.மு.க.வில் இணைந்த ஒரே வாரத்தில் மீண்டும் பா.ஜ.க.வுக்கு திரும்பிய நிர்வாகி

Published On 2022-09-02 11:50 IST   |   Update On 2022-09-02 13:09:00 IST
  • 7 நாட்கள் தி.மு.க. உறுப்பினராக வலம் வந்த உதயசூரியன் நேற்று மீண்டும் தனது மனதை மாற்றிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்கே திரும்பி விட்டார்.
  • பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க. வில் இணைந்தார்.

குனியமுத்தூர்:

கோவை மாநகர் மாவட்டத்தில் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளராக உதயசூரியன் என்பவர் இருந்தார்.

கடந்த 13 வருடங்களாக இவர் பா.ஜனதாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் உதயசூரியன், திடீரென பா.ஜ.க.வில் இருந்து விலகி கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

7 நாட்கள் தி.மு.க. உறுப்பினராக வலம் வந்த உதயசூரியன் நேற்று மீண்டும் தனது மனதை மாற்றிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்கே திரும்பி விட்டார். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க. வில் இணைந்தார்.

உதயசூரியன் கட்சியில் சேர்ந்த ஏழு தினங்களில், மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பா.ஜ.கவில் இணைந்த உதயசூரியன் கூறியதாவது:-

நான் கடந்த 13 ஆண்டுகளாக கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். அப்படி உழைத்தற்கு கிடைத்தது தான் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர் பதவி.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே, எனக்கும், மாவட்ட நிர்வாகிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்தேன்.

அந்த சமயம் தான் எனக்கு தி.மு.க.விடம் இருந்து தங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. எனக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும். அவர் தான் என் ரோல்மாடல்.

ஆனால் மாவட்ட தலைமை மீது இருந்த அதிருப்தி காரணமாகவே தி.மு.க.வில் இணைந்தேன். ஆனால் அங்கு என்னால் இருக்க முடியவில்லை. நாங்கள் தேசிய கொள்கை கொண்டவர்கள். என்னால் திராவிட கொள்கையை பின்பற்ற முடியவில்லை. மீண்டும் பா.ஜ.க.விலேயே சேர்ந்து விடலாம் என்று எண்ணினேன்.

அப்போது கட்சி மேலிட நிர்வாகிகளும் என்னிடம் பேசினார்கள். அதன்படியே நான் மீண்டும் பா.ஜ.கவில் இணைந்தேன். கட்சிக்காக நான் இன்னும் உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News